கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றேன்?? மாவை எச்சரிக்கை

வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பங்கேற் பதில்லை என்ற முடிவால், கட்சியின் உயர் பீடத்தினருக்கு இடையிலும் அது முறுகலை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் சமாளிப்பு போக்கில் நடந்துகொள்வதை அடுத்தே இந்த நிலமை தோன்றியது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் அரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் மாலை கலந்துரையாடல் நடத்தினர்.

மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்தனர்.

இந்த முடிவை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அலைபேசியூடாக அறிவித்துள்ளார்.

இதன்போது, இரா.சம்பந்தன், ‘‘இது தொடர்பில் கொழும்பில் கலந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லோரையும் கொழும்புக்கு வரச் சொல்லுங்கள்’’ என்று பிடிகொடுக்காமல் பதில் வழங்கியுள்ளார்.

இந்தப் பதிலை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாகாணசபை உறுப்பினர்களிடத்தில் தெரிவித்தார்.

இதனால் விசனமும் கோபமும் அடைந்த கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா ‘‘அப்படியானால் நான் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றேன்’’ என்று மாவை சோ.சேனாதிராசா காட்டமாகப் பதிலளித்து விட்டு, கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.