இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு!! அடையாளம் காணப்பட்டார் சந்தேகநபர்

இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு!! அடையாளம் காணப்பட்டார் சந்தேகநபர்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பில் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டார்.

நல்லூர் பின் வீதியில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜயந்தன் என்பவர், கடந்த மாதம் 25ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், நீதிபதி இளஞ்செழியனின் வாகனச் சாரதி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சம்பவத்தின் போது அங்கு தரித்து நின்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் ஆகியோர் சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளனர்.