மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் : சவால் விடுக்கும் தமிழ் வீரர்..!

வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை வெளிக்கொண்டுவர முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

அவ்வாறு கிரிக்கெட் மீது அதீத காதல் கொண்டு தனது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமையால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாமல் தவிக்கும் கிளிநொச்சி புலோப்பளையைச் சேர்ந்த இளைஞன் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் பற்றி நேற்று ஊடங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இவ் இளைஞனை அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாகவும் விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த இவ் இளைஞன், இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை விட வேகமாக என்னால் பந்து வீச முடியும். சிறு வயது முதல் லசித் மலிங்கவின் பந்து வீச்சினை பார்த்துதான் பந்துவீசப் பழகி வருகின்றேன்.

பாடசாலை காலங்களிலேயே மாகாணமட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் என்றாலும் வறுமையின் காரணமாக திறமையை உலகறிய செய்ய முடியவில்லை எனவும் தனது நண்பர் ஒருவர் வாங்கித்தந்த பந்தைப் பயன்படுத்தியே நீண்ட நாட்களாக பயிற்சியில் ஈடுபடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.