தந்தை மரணம், தாய் மறுமணம்; கூலி வேலை செய்து படிக்கும் மாணவி ; மனதை உருக்கும் சம்பவம்

சிறுவயதிலேயே தந்தையினை இழந்து, சிறிது காலத்திற்கு பின்னர் தாய் மறுமணம் செய்துக்கொண்டமையால் தாயை விட்டுப் பிரிந்து தன்னந்தனியாக சிறு குடிசையொன்றில் கூலி வேலைகள் செய்து தனது அன்றாட தேவைகளை நிறைவேற்றி வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடும் சாதனை மாணவியொருவர் மாத்தளை கலேவெல பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

சாதாரண தரப் பரீட்சையில் 8 பாடங்களிலும் சிறப்பு சித்தி பெற்று அப் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கலைப் பிரிவில் உயர்தரம் கற்றுவரும் மாணவிக்கு, குறித்த குடிசையானது பழக்கமற்ற இடமில்லை. இன்னல்கள் பலவற்றுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக தனிமையில் இம் மாணவி குடிசையில் வாழ்ந்து வருகிறார்.

சிறு வயதிலேயே தந்தை உயிரிழக்க, சிறிது காலங்களில் தாய் வேறு திருமணம் முடித்து சென்றுவிட்டார். தாய் மறுமணம் செய்ததை விரும்பாத குறித்த மாணவி அதன் பிறகு முகம் கொடுத்த பல இன்னல்களால் தனது பயணத்தை இவ்வாறு அமைத்துக் கொள்ள தீர்மானித்தாக தெரிவித்தார்.

இதயத்திற்கு இவ்வளவு கடினத்தன்மை வரக்காரணம் என்னவென்று வினவிய போது, சிறு வயதிலிருந்து கஷ்டத்தை மட்டுமே தான் அனுபவித்து வந்தமையே காரணம் என கண்ணீருடன் தெரிவித்தார்.

தனித்து வாழாமல் தாயுடன் சேர்ந்து இருக்கலாம் என நாம் தெரிவித்தமைக்கு, அங்கிருந்தால் தனது கல்வியினை தொடர இயலாது. வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாக தான் தனியாக வாழ்ந்து வரும் நாட்களை கூறமுடியும் என அவரின் சோகமயமான வாழ்க்கையினை பற்றி நம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.

எவரினதும் ஆதரவு இல்லாமல் வாழ்ந்து வரும் இம் மாணவி பாடசாலைக்கு செல்லாத நாட்களில் கூலி வேலை செய்து தனது அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார். இவ்வாறு பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் மாணவி எதிர்காலத்தில் ஒரு ஆசிரியையாகி தன்னைப் போல கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் போராடி வருகின்றார்.