கலங்கிய அமைச்சர் மங்கள

ஸ்ரீலங்காவின் பிரதான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் பேச முடியாதது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வருத்தம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்காவின் அடுத்தத் தலைமுறை அரசியல்வாதிகளாவது தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதைக்கக் கூடியவர்களாக திகழ வேண்டுமென்று குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர அவ்வாறான நிலை ஏற்படும் பட்சத்திலேயே அனைத்து இன மக்களினதும் தனித்துவங்களை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்தே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

உண்மையில் எனது நண்பரான ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆற்றிய உரையை கேட்டுக்கொண்டிருந்த போது என்னைப் பற்றியே நான் தாழ்வாக எண்ணியதுடன் வெட்கமாகவும் இருந்தது.

ஏனெனில் நானும் ஸ்ரீலங்கா பிரஜை என்ற வகையில் எமது நாட்டின் பிரதான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் பேச முடியாமை குறித்து வெட்கப்படுகின்றேன்.

உண்மையிலேயே இது பாரிய குறைபாடாகவே நான் கருதுகின்றேன். எவ்வாறாயினும் எமது நாட்டின் அடுத்தத் தலைமுறை அரசியல் வாதிகளாவது குறிப்பாக புதிய ஸ்ரீலங்காவின் அரசியல்வாதிகளாக வருபவர்கள் உண்மையான ஸ்ரீலங்கா பிரஜைகளாக நாட்டின் பிரதான மூன்று மொழிகளான சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புசக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

அவ்வாறான நிலமை ஏற்படும் போது பல்லின மற்றும் பல் கலாசாரத்தை மதித்து வாழும் புதிய ஸ்ரீலங்காவை உண்மையில் உருவாக்கியுள்ளோம் என்று பெருமை கொள்ள முடியும்.