கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும்: கருணா

கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும். அதன் மூலமாக வட.கிழக்கை ஒன்றிணைத்து பல செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் வினாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்ட மக்கள் சந்திப்பு இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில் அமைந்துள்ள செவிப்புலனற்றோர் நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

“பலமான ஒரு மாற்றுக் கட்சி தமிழ் மக்களுக்குத் தேவை எனும் நோக்கில் நாம் இக்கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த அரசாங்கம் ஊழலை ஒளிக்கவேண்டும் என்றே ஆட்சிக்கு வந்தது இருப்பினும் ஊழல் ஒளிந்ததாக தெரியவில்லை. மகிந்தவின் அரசினை சாடினார்கள்.

ஆனால் இதுவரை அந்த குற்றங்கள் கூட நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறிருக்க இந்த அரசிலும் தற்போது ஊழல் அதிகரித்து விட்டது. அது வட.மாகாண சபையையும் விட்டுவைக்கவில்லை.

கடந்த அரசு ஆட்சியில் இருக்கும்போது பல அபிவிருத்திகள் நடைபெற்றன. வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த நல்லாட்சியில் ஊழலே இடம்பெறுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.