ராஜபக்சவிற்கு இனி என்ன ஆகும்?

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்ததுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரான ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

எனினும் இது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரம்காட்டிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டம் கோட்டே பகுதியிலுள்ள அந்தக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய மத்திய செயற்குழுக் கூட்டத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமும் இணைத்து நடத்தப்படட நிலையில் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மின்வலு பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா

இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் காட்டப்படும் தாமதத்தை இல்லாது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. இந்த நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதில் இருக்கும் தடை என்னவென்பது தொடர்பில் நாம் விளங்கிகொண்டுள்ளோம்.

அதற்கு தேவையான புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். நீதியை நிலைநாட்டுவதற்கு தடையாக இருக்கும் நபர்கள் பொறுப்புமிக்க பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதேபோன்று நீதியை நிலைநாட்டுவதில் துரிதமாக செயற்படக் கூடியவர்கள் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். இந்த காரணங்கள் தொடர்பில் மத்திய செயற்குழு கூட்டத்தில் இதய சுத்தியுடன் கலந்துரையாடினோம்.

இதில் டீல் இல்லை. எம் மீது வழக்குகளும் இல்லை. எமக்கு பயமும் இல்லை. கட்சிக்காக நாட்டு மக்களுக்காக நாம் பேசினோம். அதற்கு சிறந்த பிரதிபலன் கிடைத்தது. இன்று பின்வரிசை ஆசன நாடாளுமன்ற உறுப்பினர்களால் நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது.

ஆசு மாரசிங்கவால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணையை சிட்னி ஜயரத்ன வழிமொழிந்தார். அந்த யோசனை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தனர். எவரும் எதிரான கருத்துக்களை முன்வைக்கவில்லை.

திருடர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது யாரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. ஆகவே ஒரே நிலைப்பாட்டிலேயே நாம் இருகின்றோம் எனத் தெரிவித்தார்.

எனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தான் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக உள்ள ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை தான் தலையிட்டு தாமதப்படுத்தவில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி தன்னால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிடவும் முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரங்களும் இல்லை என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நீதியமைச்சரின் இந்த விளக்கங்களை இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் பொருட்டாக மதிக்கவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முக்கிய உறுப்பினர்கள் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தனர்.

இந்த நிலமைகள் காரணமாக கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் உரிய தீர்மானமொன்றை எடுப்பார் என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மத்திய செயற்குழுவிலுள்ள 99 வீதமானவர்களும் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். நீதியமைச்சர் என்ற வகையில் அவர் செயற்படும் விதம் காரணமாகவே வழக்குகள் தாமதமடைவதாக பலர் குறிப்பிட்டனர்.

அனைவரும் இந்த விடயத்தில் பிரதமருக்கு பாரிய நெருக்கடியை கொடுத்தனர். இது தொடர்பில் பிரதமர் தீர்மானத்தை எடுப்பார் என நான் நினைக்கின்றேன். விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறினார். அதேபோன்று அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சட்டமா அதிபரை சந்தித்தனர்.

அப்பாவி மக்களின் பணத்தை ராஜபக்சக்கள் கொள்ளையடித்து இருப்பதால் எமது அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இதற்கு முடிவொன்றை எடுக்க வேண்டும். ஆகவே நீதியமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படும் என நினைக்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்றைய மத்திய செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முக்கியமாக ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் தாமதமாவது குறித்தே விரிவாக ஆராயப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

இந்த சந்திப்பில் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பல்வேறு விடயங்களை முன்வைத்தனர். விசேடமாக இந்த நாட்டில் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் விடயங்களை முன்வைத்தனர்.

எமக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசேடமாக தேர்தல் காலங்களில் திருடர்களை பிடிப்பது தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம். இதில் காணப்படும் தாமதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தமது அதிருப்தியையும், குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

அது தொடர்பில் ஆராய்வது அதேபோன்று இதில் காட்டப்படும் தாமதத்திற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. ஆகவே விசேடமாக தீர்மானங்களை மேற்கொள்ளாமை குறித்து நீதியமைச்சு தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன. சட்டமா அதிபரை சந்தித்து அது தொடர்பில் கேட்பதென தீர்மானிக்கப்பட்டது.

விசேடமாக வழக்குகள் தாமதமாகின்றமை குறித்து வினவுவது என முடிவெடுக்கப்பட்டது. வழக்குகள் தாமதமாகின்றமைக்கு காரணங்கள் எதுவனாலும் வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய செயற்குழு எடுத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

திருடர்களை பிடிக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட காணி அமைச்சர்

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தி அடைகின்றன. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய அளவான ஊழல் மோசடிகள் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கையை எடுப்போம் அவற்றை நாட்டிற்கு வெளிப்படுத்துவோம் என்ற முதல் முக்கிய வாக்குறுதியுடனேயே நாம் மக்கள் முன் சென்றிருந்தோம்.

அந்த நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த செயற்பாடுகளை உடனடியாக துரிதப்படுத்தக் கூடிய முறைகள் குறித்து அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடுமையான நிலைமைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வைத்தனர்.

அதேபோன்று நீதியமைச்சருக்கும் அந்த செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதேபோன்று நீதியமைச்சரும் தனது கருத்துக்களை முன்வைத்தார். இறுதியாக மற்றுமொரு காரணம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஒரு அமைச்சரின் கருத்தால் அமைச்சரவை கூட்டு பொறுப்பு இல்லாது போகுமாயின் அது தொடர்பில் கட்சி என்ற வகையிலும் அரசாங்கம் என்ற வகையிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக கைவிடுமாறு சிங்கள பௌத்த மக்களின் தலைமை பீடங்களில் ஒன்றான அஸ்கரிய பீடம் நேற்றைய தினம் பகிரங்கக் கோரிக்கை விடுத்திருந்தது.

சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல்கொடுத்துவரும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதே அஸ்கிரிய பீடத்தின் விருப்பம் என்றும் அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் நாயகம் தம்மாநந்த தேரர் நேற்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் காப்பாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவை மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளிலிருந்து அவர்களை காப்பாற்றி வருவதாகவும் விஜயதாச ராஜபக்ச மீது அரசாங்கத்தின் அமைச்சர்களே பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.