மீண்டும் முதலிடத்தில் இலங்கை!

உலகளாவிய ரீதியில் அப்பாவிகளுக்கெதிரான சித்திரவதைகளை கட்டவிழ்த்துவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ப்ரீடம் ப்ரம் டோர்ச்சர் என்ற அமைப்பின் வருடாந்த அறிக்கையில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அப்பாவி மக்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பான ஆய்வொன்றை குறித்த அமைப்பு மேற்கொண்டிருந்தது.

சர்வதேச அளவில் இலங்கை உள்ளிட்ட 76 நாடுகளில் இது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டிருந்தன. அந்தவகையில் சர்வதேச அளவில் அப்பாவிகள் மீதான சித்திரவதைச் சம்பவங்கள் கடந்த ஆண்டு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கூடுதலான அளவில் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் 230 சித்திரவதைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் வெளியில் வராத மேலும் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சித்திரவதைகள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ஈரானில் கடந்த ஆண்டு 140 சித்திரவதைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் ​தொடர்வதுடன் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து பெற்றிருந்த பலரும் இலங்​கைக்குத் திரும்பி வரும்போது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.