வித்தியா கொலை வழக்கில் தேடப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜன் நாட்டை விட்டுத் தப்பி ஓட்டம்??

வித்தியா கொலை வழக்கில் தேடப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜன்  நாட்டை விட்டுத் தப்பி ஓட்டம்??

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த எட்டாம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் கடந்த யூலை மாதம் 15 ஆம் திகதி விசாரணைகளுக்கென அழைக்கப்பட்டிருந்த லலித் ஜயசிங்க, அன்றைய தினமே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் வித்தியா கொலை வழக்கில் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தது.

குற்றவியல் சட்டத்தின் 209 ஆவது பிரிவின் கீழ், பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவினார் என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைகளின் போது தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மறுப்பு வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம் நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டுவரும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜன், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திலிருந்து சி.சி.ரி.வி காணொளி காட்சிகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்குடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரிடமும் இருந்து எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்டிருந்ததுடன், அது தொடர்பான விசாரணை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் ட்ரயல் அட் பார் முறையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.