இலங்கையில் காதல் வலை விரித்து திருடனை கைது செய்த பெண் பொலிஸ் அதிகாரி

பண்டாரகம கல்துடே பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இரு தடவைகள் திருடிய திருடனை காதல் வலை விரித்து பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் திருட்டு இடம்பெற்ற நிலையில் அது தொடர்பான விசாரiணை பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் களவு போன வர்த்தக நிலையம் முன்பாக இருந்த வீட்டில் வசித்து வந்த நபர் களவு போன தினத்தில் இருந்து காணாமல் போன நிலையில் அவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது அந்த நபர் தங்கியிருந்த வீட்டின் பகுதி பூட்டப்பட்டிருந்த போதும் அதில் ஒரு தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டிருந்தது.

குறித்த தொலைபேசி இலக்கம் சந்தேக நபரினுடையது என்பதை தெரிந்துகொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி அதனை ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து இரவில் அழைப்பை ஏற்படுத்தச் செய்துள்ளார்.

குறித்த பெண் பொலிஸ் சந்தேக நபருடன் வசியமாக பேசி அவரை காதல்வயப்படுத்தியுள்ளார்.

காதல் போதையில் குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை சந்திக்க வந்த திருடன் வசாக பொலிசாரிடம் மாட்டியுள்ளார்.

இதனையடுத்து அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அந்த வர்த்தக நிலையத்தில் திருடிய பணம் பொருட்கள் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை திரட்டியதாகவும், அதன் பின்னர் அளுத்கம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவருடன் மஹியங் கனைக்கு சென்றதாகவும் அவர்களுடன் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் நன்கு கவனிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபர் சிறு வயதில் தனது தாயை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவராவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.