விக்னேஸ்வரனும் கம்மன்பிலவும் ஒன்று சேர்ந்து விட்டனர்

ஸ்ரீலங்காவின் மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் முன்வைத்துள்ள 20 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆதரவு கூட்டு எதிரணியின் முக்கியஸ்த்தரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உச்ச நீதிமன்றல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைய மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாது பிற்போடப்படுகின்றமை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் உதய கம்மன்பில தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 20 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த திருத்தம், மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் நோக்குடனேயே கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேர்தல்களை வேண்டுமென்றே பிற்போடும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் கூறிவரும் போதிலும், திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில

“ இந்த மனுத் தாக்கலின் நோக்கம் தான், இந்த நாட்டு மக்களுக்குரிய சிறிய தேர்தல் ஒன்றை நடத்தும் காலத்தையே இந்த அரசாங்கம் பிற்போடுகின்றது. தேர்தல் தொடர்பான அச்சமே மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு புதிய காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.

எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி உள்ளூராட்சித் தேர்தலை பிற்போட்டனர். எல்லை நிர்ணயம் நிறைவடைந்து ஆறு மாதங்கள் கடந்துள்ளன. எனினும் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களையே காணவில்லை. அதேவேளை சப்ரகமுவ, வட மேல், கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த மாதம் அளவில் நடைபெற இருக்கின்றன.

இந்த அரசாங்கத்திற்கு ஏற்படும் தோல்வியை பிற்போடும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டே அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் வகையில் 20 ஆவது சட்டத் திருத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை பிற்போட வேண்டுமாயின் சர்வஜென வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அரசியலமைப்பில் 82 ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கூறவில்லை. எனினும் மக்களின் வாக்களிக்கும் உரிமை தேர்தல் ஊடாகவே கிடைக்கின்றது. ஆகவே தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் நடைபெறுமாயின் சர்வஜென வாக்கெடுப்பின் ஊடாக மக்களிடம் அது குறித்து கேட்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 3 ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.

சர்வஜென வாக்கெடுப்பு ஊடாக அன்றி 3 ஆவது சரத்தைக் கூட மாற்ற முடியாது. ஆகவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் 3 இல் 2 பெரும்பான்மையை பெறுவதற்கு மேலதிமாக கட்டாயமாக சர்வஜென வாக்கெடுப்பின் ஊடாக மக்களின் அனுமதியை பெற வேண்டும் என நாம் உயர் நீதிமன்றத்தை கோருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 20 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஊவா மாகாண சபை நேற்றைய தினம் முழுமையாக நிராகரித்திருந்தது.

இந்த நிலையில் 20 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் ஊடாக தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்களை அடிப்படையாகக் கொண்ட மாகாண சபைகளின் அதிகாரங்களையும் மத்திய அரசு கையகப்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமைந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனால் இந்தத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என்று நேற்றைய தினம் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.