இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்த பிரபாகரன் வீழ்த்தப்பட்டது எப்படி?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் இறுதிக் கட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..

தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார்.

இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடையத் தயாராக இருப்பதாக நோர்வேக்கான முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

எனினும் பிரபாகன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை. யுத்தம் நிறைவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தொலைபேசி அழைப்பை நாம் கேட்டோம்.

இதன்போது கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை செவிமடுத்தோம். அதில் கே.பி பின்வருமாறு தெரிவித்தார்..

உங்களால் யுத்தத்தை செய்யமுடியாது, எனவே கைவிடுங்கள். நீங்கள் முதலில் வெளியேறுங்கள். நீங்கள் வெளியேறி வெளிநாட்டுக்குச் செல்லுங்கள் பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டுக்குத் திரும்பிச் சென்று பார்க்கலாம் என்றார்.

ஆனால் பிரபாகரன் அதனை ஏற்கவில்லை. என்னால் நிலைமைகளை மாற்ற முடியும். நிலைமையை மாற்றுவதற்கு எனக்கு ஆயுதங்கள் மாத்திரமே தேவை என்று பதிலளித்தார்.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொண்டது பிரபாகரனுக்கு ஒருபோதும் சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதே எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.