யாழ்ப்பாணத்திற்கு ஊடுருவிய சினிமா வைரஸ்!!

அஜித் இன்றைய இளைஞர்களின் உயிர் நாடி. அஜித்தின் நடிப்பிற்காக உருவான ரசிகர்கள் கூட்டத்தை விட அஜித் என்ற நல்ல மனிதனுக்கு உருவான ரசிகர்கள் தான் அதிகம்.

தன்னம்பிக்கை, விடா முயற்சி, தோல்வியிலும் துவளாத தன்மை , மற்றும் விமர்சனங்களை தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மை போன்ற பண்புகள் தான் அஜித்தை ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார செய்துள்ளது.

தனது ரசிகர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளாத ஒரு நல்ல மனிதன் தான் அஜித்.என்னுடைய படங்கள் நன்றாக இருந்தால் மட்டும் பாருங்கள் .

மற்றும் படி என் பின்னே வந்து உங்கள் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்.பெற்றோரை கவனியுங்கள் என்று அஜித் நேரடியாகவே தனது ரசிகர்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்தவர்.

ரசிகர் மன்றம் என்ற பெயரில் இளைஞர்கள் தமது நேரத்தை வீணடிப்பதுடன் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் பீர் அபிஷேகம் செய்து பணத்தை வீண் விரையம் செய்வதை விரும்பாத அஜித் தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் அதிரடியாக கலைத்தார்.

தமிழ் சினிமாவில் கவுண்டமணிக்கு அடுத்து ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தாத நடிகர் என்றால் அது அஜித் மட்டுமே.

அஜித் ரசிகர்களை விட்டு ஒதுங்கினாலும் ரசிகர்கள் அஜித்தை விடுவதாக இல்லை. விழா மேடைகளில் அஜித்தின் பெயரை சொன்னாலே போதும் கரகோஷம் , விசில் சத்தம் காது சவ்வை பிளக்கின்றது.

அஜித்தின் டீசர், ட்ரைலர் , படம் வெளிவரும் போது சமூக வலைத்தளங்கள் அதிரும் நிலை காணப்படுகின்றது.

படம் வெற்றியோ தோல்வியோ அஜித் படம் வெளி வந்தால் அது தல ரசிகர்களுக்கு திருவிழா போன்றது.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படம் வெளியாகி திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகின்றது .

விவேகம் படத்தை ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை காலமும் இந்தியாவில் மட்டுமே இருந்த சினிமா வெறி இப்போது இலங்கையிலும் ஊடுருவியுள்ளது. இலங்கையில் அஜித் விஜய்க்கு ஏராளம் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் ரசிகர்களாக இல்லாமல் இப்போது சினிமா வெறியர்களாக மாறியுள்ளனர்.

விவேகம் படத் திருவிழாவை கொண்டாடி வரும் அஜித் வெறியர்கள் அஜித் கட் அவுட்டினை யாழ்ப்பாணத்தின் வீதிகளில் மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்றுள்ளனர் .இந்தப்புகைப்படங்கள் பேஸ்புக்கில் வைரல் ஆகியுள்ளது.இலங்கையில் 30 வருடகால கொடிய யுத்தத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தமது உடமைகளை இழந்து , அவயவங்களை இழந்து இன்னமும் ஒரு நேர உணவுக்கு அவதிப்படும் நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் வீரமும் தியாகமும் அர்ப்பணிப்பும் நிறைந்த யாழ்ப்பாணம் மண்ணில் அஜித் விஜய் ரசிகர்களின் இவ்வாறான பித்தலாட்டம் பலரையும் எரிச்சல் படுத்தியுள்ளதாம்.

அஜித் ஏற்கனவே கூறியிருப்பது போன்று படம் நன்றாக இருந்தால் மட்டும் பார்த்து விட்டு அவரவர் வேலையை பார்க்க வேண்டும் என்பதே சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக இருக்கின்றது. நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்த்தல் நாடும் உருப்படும் வீடும் உருப்படும்.