இலங்கையில் மூன்று சிறுமிகளை கடற்கரைக்கு அழைத்து சென்ற இளைஞன் சிக்கினார்

மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றி சிலாபத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படும் 25 வயதான நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று அவரை ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், குளியாபிட்டிய பிரதேசத்திற்கு மேலதிக வகுப்பிற்கு வந்த 3 சிறுமிகளை இவ்வாறு மோட்டார் வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் குளியாபிட்டிய - பல்லேவெல பிரதேசத்தில் உந்துருளி திருத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை மேலதிக வகுப்பிற்காக வந்த இந்த சிறுமிகளில் ஒருவர், தனக்கு வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி வீட்டை விட்டு செல்ல வேண்டும் என ஏனைய சிறுமிகளிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதில் ஒரு சிறுமியுடன் காதலில் ஈடுபட்டிருந்த குறித்த இளைஞன், இது தொடர்பில் அறிந்து, அந்த மூன்று சிறுமிகளையும் மோட்டார் வாகனத்தில் ஏற்றி சிலாபம் கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

காவல்துறையின் விசாரணையில், வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறிய சிறுமி, இதற்கு முன்னர் பாடசாலைக்குள் போதைப்பொருளை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை சிலாபத்திற்கு செல்ல முன்னர் அந்த சிறுமி, இரண்டு முறை வீட்டுக்கு வந்து கதவை உடைத்து மடிக்கணனி, தாயின் கையடக்க தொலைபேசி மற்றும் சில ஆடைகளையும் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிகள் 14 மற்றும் 15 வயதிற்கு இடைப்பட்டவர்களுடன், அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுனர்.

இந்நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.