மாணவர்களின் கொடூர இழப்புக்களால் பதை பதைத்த யாழ் மண்! ஏன் இந்த நிலை எமக்கு?

அதிர்ச்சியும் சோகமும் கலந்த ஒரு அந்தர நாளாக யாழ்மண்ணின் இன்றைய நாள் கடந்துபோகிறது. ஒரே நாளில் வலி மிகுந்த இழப்புக்கள்.

ஒரு பக்கம் என்றுமே இல்லாத யானைத் தாக்குதல், மறுபக்கம் படகு விபத்து... எம் இனத்துக்கு ஏன் இந்தக் கொடுமை!

விழுங்கிவிடுமளவுக்கெல்லாம் ஆழமானதல்ல அந்தக் கடற்பகுதி. வளம் நிறைந்த கண்டமேடைக் கடல் என்று சொல்வார்கள்.

யாழ்ப்பாண நிலத்திணிவை குடாநாடு என்று சொல்வதற்கு ஏதுவாய் அமைந்த கடனீரேரி அது. வடக்கின் மிகப்பெரிய நீரியல்வளச் சொத்துக்கள் முத்துக்கள் அனைத்தும் இயற்கையால் கொட்டப்பட்ட பகுதி.

அப்படியான ஒரு இடத்தில் எங்கள் எதிர்காலச் சொத்துக்கள் கொத்தாகப் பறிபோனதை மனம் ஏற்குதில்லையே. ஏன் இந்த விபரீத எண்ணங்கள்? எங்கள் இளைஞர்களுக்கு இருக்கக்கூடாத பண்பல்லவா?

மனிதன் இயற்கையோடு இணைந்து கொண்டாட முற்படுகின்ற நேரமெல்லாம் இயற்கையோடு இயைந்து செல்லுதல் என்ற ஒன்றை மறந்துவிடுவதால்தான் இயற்கை அவனைத் தண்டிக்கிறது.

பயிற்சியும் பழக்கமும் வழக்கமும் இல்லாத ஒரு செயலைச் செய்யப்போகின்றபோதுதான் இயற்கை தனது குரூர முகத்தைக் காட்டிவிடுகிறது.

சமூகத்திற்கு சீர்கேடுகளைத் தரவல்ல எந்தவொரு கொண்டாட்டமும் வெறுக்கப்படவேண்டிய ஒன்றே.

அவர்கள் யார் பெற்ற பிள்ளைகளோ அறியேன்; யார் ஊட்டி வளர்த்த பிள்ளைகளோ அறியேன் யார் கற்பித்து ஆளாக்கிய பிள்ளைகளோ என்பதையும் அறியேன்.

ஆனால் அவர்களை இழந்ததனால் அந்த முகம்தெரியாத மனிதர்கள் எவ்வளவு பதறியும் கதறியும் தேற்றுவார் யாருமின்றி தேகத்தை நோவார்கள் என்பது தெரியும்.

நிதானமுள்ள மனிதர்களால் சாதாரணமாகவே அடுத்தவர் வேதனைகளை உணர்ந்துகொள்ள முடியும்.

இளங்கன்று பயமறியாது என்ற ஒற்றைத் தொடருக்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்களை எம் முன்னோர் எப்படியெல்லாம் பதுக்கிவைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை சில நிகழ்வுகள்தான் அவ்வப்போது எடுத்துக்காட்டுகின்றன.

பயமறியாத அந்த இளமனது, தனது எதிர்காலத்தை மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையே கணத்தில் சிதைத்துவிடுகிறது.

இன்றைய மண்டைதீவுச் சம்பவம் இனிமேலும் நடக்காதளவுக்கு இன்றைய பெற்றோர் தமது பிள்ளைகளை வளப்படுத்தவேண்டும்.

நண்பர்களாக ஒன்றிணைதல் தவறல்ல, ஆனால் சுய பழக்கவழக்கமும் சுய பாதுகாப்பும் மிக மிக முக்கியமானது. காட்டெருமைக் கூட்டத்தை வேட்டையாடவந்த சிங்கம் பலவீனமான எருமை ஒன்றை இனங்காணபதற்காக எவ்வளவு நேரமும் காத்திருக்குமாம்.

பின்னர் அதனைக் கூட்டத்திலிருந்து பிரித்து இலகுவாக வேட்டையாடுமாம். இயற்கையின் வேட்டையும் அவ்வாறானதே.

நண்பர் கூட்டத்தோடு இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை மறந்துவிடுகிறோம்.

நிலமை மோசமடைகின்றபோதுதான் நம்மை நாமே உணரத் தொடங்குகிறோம். அப்பொழுது நமக்காக இயற்கை சிறு துளியளவுகூட இறங்கிவரப்போவதில்லை. மிக மோசமாக வஞ்சித்துவிடுகிறது.

கூடுவாரோடு கூடுவதும் குற்றம், கூடாத செயல்களைப் பழகுவதும் குற்றம். உங்களைப் பெற்றவர்களின் கனவுகள் கற்பனைகள் ஆசைகள் அனைத்தையும் சிதைக்கின்ற காரியங்கள் இனிமேலும் வேண்டாம் இளைஞர்களே. உயரிழந்த அந்த உறவுகளுக்கு நெஞ்சம் கனத்த இரங்கல்கள்!!