யாழ் படகு விபத்து; நேரில் பார்த்த மாணவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்

யாழ் படகு விபத்து; நேரில் பார்த்த மாணவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்

யாழ்.சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவர்கள் நீரில் மூழ்கியதனாலேயே உயிரிழந்துள்ளார்கள் எனவும், உயிரிழப்பதற்கு முன் மாணவர்கள் எதாவது அருந்தியுள்ளார்களா? என அறிந்து கொள்ள மாணவர்களின் உடல்கூறுகள் எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மண்டைத்தீவு பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றிருந்த போது சிறுத்தீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கொண்டு 7 மாணவர்கள் கடலுக்குள் சென்றிந்த நிலையில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் 6 மாணவர்களினதும் சடலங்களும் மீட்க்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நண்பகல் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி உயிரிழப்பு தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய உயிரிழந்த மாணவர்கள் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளார்கள் என்பது சட்டவைத்திய அதிகாரி யினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவர்களின் உடல்கூற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்கள் இறப்பதற்கு முன்னர் எதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை அறிந்து கொள்வதற்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே அவர்கள் ஏதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை உறுதியாக வெளிப்படுத்த முடியும் என கூறினார்.

மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 2 மாணவர்கள் சிறுத்தீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்து கொண்டு கடலுக்குள் செல்ல முயன்றதாகவும் அதன் பின்னர் மற்றவர்கள் அதில் ஏறியதாகவும் பின்னர் கடலுக்குள் சென்றதும் படகு கவிழ்ந்தே மாணவர்கள் தண்ணீருக்குள் வீழ்ந்ததாகவும் அவர்களுக்கு நீச்சல் தெரியாது எனவும் சம்பவ இடத்திலிருந்த மற்றைய மாணவர்கள் கூறுகின்றனர்.