கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைக்கு நேற்றிரவு நடந்த பயங்கரம்!

கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைக்கு நேற்றிரவு நடந்த பயங்கரம்!

கிளிநொச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற பெற்றோல் தாக்குதலால் ஏற்பட்ட தீ பரவுகையினால் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதில் குழந்தையின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் ரமேஸ்குமார் சுயித் என்ற 2 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தந்தையான 27 வயதுடைய சிவசுப்பிரமணியம் ரமேஸ்குமார் தீக்காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த குடும்பத்தினர்,

”மூன்றுபேர் நேற்றைய தினம் இரவு கடைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் கேட்ட பொருட்களை எடுப்பதற்கு கடைக்குள் சென்ற போது அதில் ஒருவர் பெற்றோலை கடையினுள் விசிறியுள்ளார். இதனாலேயே தீ பற்றிப் பிடித்து இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது” எனக் குறிப்பிட்டனர்.

எதுவாயினும் கடயினில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமெராவினில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமையினால் இதுகுறித்த விசாரணைகளை தர்மபுரம் பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சி குற்றத்தடயவியல் பொலிஸாரும் முன்னெடுத்துவருகின்றனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த கமராவைச் சோதனையிட்டு இந்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அனர்த்தத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.