பாம்பு துரத்தினால் இதை ஒருபோதுமே மறக்காதீர்கள்!

பாம்பு துரத்தினால் இதை ஒருபோதுமே மறக்காதீர்கள்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள், உண்மைதான். ஆனால் பாம்புதான் உண்மையிலேயே மனிதனைக் கண்டு நடுங்குமாம். அதற்கு காரணம் மனிதனிலிருந்து வெளிவரும் வாடைதான் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது மனித வாடை பாம்பை எச்சரிக்கையடைய வைக்கின்றது. இதனால் மனிதனை நெருங்குவதிலிருந்து பாம்பு பின்வாங்கிவிடுகிறது. பாம்பு ஒருபோதும் நம்மைத் தேடிவந்து கடிப்பதில்லை. நாம் தான் தெரிந்தோ தெரியாமலோ அதன் வழியில் குறுக்கிட்டு அதனிடம் கடி வாங்குகிறோம்.

னமது பிரதேசங்களில் சாதாரணமாகவே பல விஷப்பாம்புகள் காணப்படுகின்றன. இவற்றில் நான்கே நான்கு பாம்புகளிடமிருந்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். ஏனெனில் இந்த நான்கு பாம்புகளினதும் விஷம் நாம் உயிருடன் போராடுவதற்கு மேலதிக நேரத்தைத் தருவதில்லை.

இந்தப் பாம்புகள் கடித்தவுடன் அவற்றின் விஷம் நமது உடலில் வேகமாகப் பரவி நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றது. அதனால் மரணத்தின் வருகை தாமதமின்றி நடந்துவிடுகிறது.

அந்த நான்கு பாம்புகளும் எவையெனில், நாகபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என்பனவே. இவை தான் நமது சூழலிலுள்ள மிக ஆபத்தான பாம்புகள்.

பாம்புக்கடியால் உயிரைவிடும் மனிதர்களில் 99 வீதமானோர் கடிபட்ட பயத்திலும், சரியான முதலுதவி இல்லாததாலும்தான் இறந்துபோகின்றனர். உண்மையில் பாம்புக்கடியின் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பில் பெரும்பாலான மக்களுக்கு போதிய முன்னறிவு இல்லை என பல ஆய்வுகளும் தெரிவித்துவருகின்றன.

‘யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடவேண்டும்; பாம்பு துரத்தினால் நேராக ஓட வேண்டும்' என்று நமது மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள், உண்மைதான். ஆனால் பெரும்பாலான பாம்புகள் மனிதர்களைத் துரத்துவதில்லை.

அதிகமாகச் சீண்டப்பட்டதனால் மூர்க்கம் கொண்ட பாம்புகள்தான் சிலவேளைகளில் மனிதர்களைத் துரத்துகின்றன. சிலவகை மலைப்பாம்புகள் அவ்வகையானவை. இந்தத் துரத்தலின்போது நாம் வளைந்து வளைந்து ஓடுவதைவிட நேராக ஓடவேண்டும் என்கிறார்கள்.

நாம் நேராக ஓடுகின்ற போது வளைந்து வளைந்து ஓடுகின்ற பாம்பின் பார்வைக் கோணத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் துரத்துவதிலிருந்து அது சலிப்படைந்து அந்த நடவடிக்கையைக் கைவிடுகிறது.

எது எவ்வாறாயினும் இந்த உலகில் உயிர்வாழும் உரிமை பாம்புக்கும் உண்டே. அதனைக் கண்டவிடத்து அடிப்பதும் கொல்லுவதும் முறையற்ற செயற்பாடுகள். பாம்பு நம்மை நெருங்காமல் இருக்கவேண்டுமெனில் நமது சூழலை நாம்தான் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.