சுற்றாடல் முன்னோடிகளுக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு!

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

எதிர்கால பிரஜைகளை சுற்றாடல் நேயமிக்கவர்களாக சமூகத்தில் உருவாக்கி சுற்றாடல் மரபுரிமையை அடுத்த தலைமுறையினருக்கு வழங்கும் நோக்குடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கல்வி அமைச்சுடன் இணைந்து தேசிய சுற்றாடல் முன்னோடி திட்டத்தை பாடசாலைகளில் அமுல்படுத்துகிறது.

ஏழாவது தடவையாக நடைபெற்ற பதக்கம் அளிப்பு நிகழ்வில் 09 மாவட்டங்களை சேர்ந்த 16 பாடசாலைகளிலிருந்து 40 சுற்றாடல் முன்னோடிகள் ஜனாதிபதியிடமிருந்து சுற்றாடல் முன்னோடி பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். விசேட திறமையை வெளிப்படுத்திய பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

2001 – 2016 காலப்பகுதியில் ஆகக் கூடுதலாக 73 ஜனாதிபதி பதக்கங்களை பெற்றவர்களைத் தாய்நாட்டுக்கு தந்த அம்பாந்தோட்டை, தங்காலை மகளிர் கல்லூரி மற்றும் இரண்டாவது கூடுதலான பதக்கங்களைப் பெற்ற குருணாகல் உடுபந்தலவ சுதர்சன மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் ஜனாதிபதியினால் சிறப்பு பாராட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன.

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் லால் மேர்வின் தர்மசிறி உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.