தமிழர்களுக்கு வீடும் பணமும் மஹிந்தவின் அதிரடி வாக்குறுதி

தமிழர்களுக்கு வீடும் பணமும் மஹிந்தவின் அதிரடி வாக்குறுதி

எதிர்வரும் உள்ளூராட்சி சபை, மாகாண சபைத் தேர்தல்களில் கூட்டு எதிர்க்கட்சியில் போட்டியிட முன்வரும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி வீடும் மற்றும் பண உதவிகளும் செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை அம்பாந்தோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கும் தமிழர்களிடம் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது என்று சந்திப்பில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சிக்கு தமிழர்களின் ஆதரவு தேவையென மஹிந்த ராஜபக்ச கூறுவதாகவும் நன்றாக அரசியல் தெரிந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய தமிழர்களை இனம் கண்டு தருமாறு மஹிந்த ராஜபக்ச தன்னை சந்தித்த தமிழர்களிடம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்றும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் எனவும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களை தினமும் சந்தித்து பேசிவரும் மஹிந்த ராஜபக்ச கடந்தகாலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களையிட்டு கவலையடைவதாகவும் எதிர்க்காலத்தில் அனைத்தும் சீர் செய்யப்படும் என கூறுவதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பிலும் சில தமிழர்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் கொட்டாஞ்சேனை விவேகானந்தர் சபை மண்டபத்தில மஹிந்த ஆதரவு தமிழர்களின் கூட்டம் ஒன்று இடம்பெற்றதாக செய்தியாளர் கூறினாா்.

271 பிரதேச சபைகள், 41 நகர சபைகள், 23 மாநரசபைகள் மற்றும் ஒன்பது மாகாணங்களுக்கான தோ்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. 335 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் அடுத்த ஆண்டு தை மாதம் பிற்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.