சியம்பலாவெவ வனப்பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்- இருவர் உயிரிழப்பு

சியம்பலாவெவ வனப்பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்- இருவர் உயிரிழப்பு

புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாவெவ வனப்பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்றவர்களினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சியம்பலாவெவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய லெனின் ரொசான் மற்றும் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய பியால் ரத்னசிறி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் சடலங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவித்த கருவலகஸ்வெவ பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.