கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாக வந்த உத்தரவு

அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே இளைஞர் ஒருவரது கன்னத்தில் அறைந்த உதவி பொலிஸ் உத்தியோகத்தர் தஷார தலுவத்தவுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தை 99 வருட குத்தகைக்கு இந்தியாவுக்கு வழங்க வேண்டாமென வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் அண்மையில் அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

இதன்போது கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கைது செய்த உதவி பொலிஸ் உத்தியோகத்தர் தஷார தலுவத்த, அவரது கன்னத்தில் அறைந்த சம்பவம் காணொளியாக பதிவுசெய்யப்பட்டு சடுதியாக இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும் வைரலாகியது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசேட விசாரணையை பொலிஸ் ஆணைக்குழு நடத்தியது.

ஆணைக்குழுவின் அறிக்கை இன்றைய தினம் பொலிஸ்மா அதிபருக்கு பாரப்படுத்திய நிலையில் அதில் குறித்த உதவி பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பொலிஸ் அதிகாரி அம்பாந்தோட்டையிலிருந்து மாத்தறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.