ரணில் விசாரணைக் கூண்டில்??

ரணில் விசாரணைக் கூண்டில்??

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை காப்பாற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம், அரசாங்கத்திடமும் தாம் கோரிக்கையினை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

நேற்றைய தினம் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம் ஆகியோரிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தியது.

எனினும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது குறுக்குக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. இந்த விடயம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது மக்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மத்தியவங்கியில் இடம்பெற்ற மோசடியின் பின்னணியில் செயற்பட்டு வருபவர் யார் என்பது மக்கள் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்டு விட்டது.

அதன்படி முழு நாடுமே தற்போது ரணில் விக்ரமசிங்க விசாரணைக் கூண்டில் எப்போது ஏற்றப்படுவார் என்பது தொடர்பிலேயே ஆர்வமாகவுள்ளனர்.

எவ்வாறாயினும் இன்னும் ஓரிரு தினங்களில் உண்மை நிலவரங்கள் வெளிப்படுத்தப்படும். மத்திய வங்கி மோசடியில் உண்மையான குற்றவாளிகளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணை செய்யுமா? என்பது விரைவில் தெரியவரும் என மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.