வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இரத்தினதீப விருதுகள்!

வவுனியா மாவட்டத்தில் ஊடகத்துறையில் நீண்ட காலமாக பணியாற்றிய பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.

நோர்த் மாஸ் மீடியா கல்லூரியின் பணிப்பாளர் அ. நபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக கலை கலாசார மன்றம் சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகளை வழங்கியிருந்தது.

வவுனியா மாவட்டத்தில் சமூக நலன்கொண்டு ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களான பொ.மாணிக்கவாசகம், ந.கபில்நாத், கே.வசந்தரூபன், எம். ஜி.ரட்ணகாந்தன், க.வரதகுமார், எஸ்.கஜேந்திரகுமார், மற்றும் சிங்கள ஊடகங்களில் கடமையாற்றும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட 10 ஊடகவியலாளர்களுக்கு மேற்படி விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் குறித்த ஊடகக்கல்லூரியின் பகுதிநேர ஆசிரியராகவும், ஊடகவியலாளராகவும் செயற்படும் சுரேந்த் லக்ஷ்மிக்கு சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், சமூக சேவைகள் மற்றும் கல்வித்துறைகளில் பணியாற்றிய 44 பேருக்கும் இவ் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.