எமது போராட்டத்தை அரசியலாக்கவேண்டாம்: கேப்பாபிலவு மக்கள்!

தமது போராட்டத்தை அரசியல் கட்சிகள் தாமே நடத்துவதாக உரிமை கோருவதை நிறுத்துவதுடன், தமது போராட்டத்தினை அரசியலாக்க வேண்டாம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நிலமீட்பு போராட்டம் எட்டுமாதமாகத் தொடருகின்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது போராட்டத்திற்கு உணவு உள்ளிட்ட உதவிகளைப் பல்வேறு மனிதாபிமான அமைப்புக்களும் கட்சிகளும் உதவி வருகின்றமை உண்மையே. நாம் எமது நிலத்திற்கான மீட்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்புதான் அரசியல் கட்சிகள் எம்மை நோக்கி வரத்தொடங்கினர்.

அதன்பிறகுதான் அவர்கள் எமக்கு உதவினர் எமது போராட்டத்தை எந்தக்கட்சியும் கட்சி சார்ந்த நபரும் தலைமை தாங்கவில்லை இது ஒரு மக்கள் போராட்டம். இதை அரசியல் இலாபத்திற்காக எந்த கட்சியும் பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அண்மையில் கேப்பாபிலவு போராட்டம் தமது கட்சியை சேர்ந்த ஒரு பெண்மணியினாலேயே தொடக்கி வைக்கப்பட்டதாகவும், அதற்கு தொடர்ந்து தம்மாலான அனைத்து உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.