வவுனியாவில் ஆறு பேர் திடீர் கைது!

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தமை தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இளைஞர்கள் சிலர் மோட்டர் சைக்கிள் இலக்கத்தகடுகளை துணியால் மறைத்து கட்டிவிட்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வியாபார நிலையம் ஒன்றையும் சேதப்படுத்தியிருந்தனர்.

அத்துடன்,இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இதுவரை இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.