வெறி நாயினால் பலியான பிரான்ஸ் சிறுவன்! இலங்கைக்கு ஏற்படப்போகும் பின்னடைவு

ஸ்ரீலங்காவின் விசர் நாய் ஒன்று பிரான்ஸ் நாட்டு சிறுவனைக் கடித்ததனால் குறித்த சிறுவன் மரணமாகியுள்ளார். இதனால் ஸ்ரீலங்காவின் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் ஒருவர் கடந்த திங்கட் கிழமையன்று விசர் நாய்க்கடி நோயினால் அஅவரது சொந்த நாட்டில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பிரான்ஸ் நாட்டில் விசர் நாய்க்கடியினால் உயிரிழந்த சம்பவம் கடந்த 99 வருடங்களுக்குப் பின்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் சுற்றுலா ஒன்றிற்காக தனது பெற்றோருடன் இலங்கை வந்து தென்னிலங்கையில் திக்வெல்ல என்ற இடத்தில் தங்கியிருந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள கடற்கரையில் வைத்து குறித்த சிறுவனை நாய் ஒன்று கடித்துள்ளது. இதற்கு சிகிச்சை பெறாத நிலையில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றபின்னர் குறித்த சிறுவன் கடும் நோய்த்தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிகையின்போது ரேபிஸ் எனப்படும் விசர் நாய்க்கடி நோயினால் குறித்த சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதன் பின்னர் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் குறித்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்களாலும் பேசப்பட்ட நிலையில் ஸ்ரீலங்காவின் சுற்றுலாத்துறைக்கு பாரிய சவால் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா வல்லுநர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.