பெருமளவு ஆயுதங்களுடன் வான் சுற்றிவளைப்பு

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் குழுவிற்கும், விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் திவுலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த குழு தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இன்று விசேட அதிரடிப்படையினர் சம்பவம் இடத்திற்குச் சென்றபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பதிலுக்கு விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், இதற்கு முன்னர் கடற்படையில் கடமையாற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

அத்தோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானில் இருந்து ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, வானிலிருந்து கைக்குண்டுகள், துப்பாக்கிகள் என பெருமளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்காக திவுலப்பிட்டிய பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.