யோஷித்தவின் பாட்டி விடுத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ச மீதான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களில் ஒருவரான வயோதிபப் பெண் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வழக்கு மீதான அடுத்த கட்டநடவடிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு தெஹிவளை பகுதியில் பலகோடி ரூபா பெறுமதியான அதிசொகுசு வீடொன்றை நிர்மாணித்து அதில் சில பகுதியை வயோதிபப் பெண் ஒருவரது பெயருக்கு மாற்றிய விவகாரத்தில் முன்னாள் கடற்படைச் சிப்பாயான யோஷித்த ராஜபக்ச மீது நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

பிரதான சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவும், இரண்டாவது சந்தேக நபரான வயோதிபப் பெண்ணும் மன்றில் முன்னிலையாகினர்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது உடல்நலத்தை காரணம்காட்டி வயோதிபப் பெண்ணின் வீட்டிற்குவந்து பொலிஸார் வாக்குமூலத்தை பதிவுசெய்வதற்கான கோரிக்கையை அவர்சார்பான சட்டத்தரணி மன்றில் முன்வைத்தார்.

எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், உரிய மருத்துவ அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யும்வரை ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கும் மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட யோஷித்த ராஜபக்ச “இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இன்றைய தினம் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு அதிகாரிகள் குற்றவியல் சட்டக்கோவையின் 24ஆவது பிரிவு மற்றும் தேசிய வருமான வரிச் சட்டத்தின் 209ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை நடத்துவதற்கும், சந்தேக நபர்களை விசாரிக்கவும் கோரிக்கையை நீதிமன்றத்திடம் கோரினர்.

இதற்காகவே இன்று இரண்டாவது தடவையாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தக் கோரிக்கையை மன்று ஏற்றுக்கொண்டது. இதற்கமைய அடுத்தவருடம் ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல சந்தேக நபரில் ஒருவரான வயோதிபப் பெண்ணின் உடல்நிலையை கருத்திற்கொண்டு விசாரணை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அவரது இல்லத்திற்குச் சென்று வாக்குமூலம் பதிவுசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர் சார்பாக நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவ்வாறு வழக்கு விசாரணைகளுக்கு வரமுடியாதபடி நிலைமை காணப்பட்டால் அதற்கான மருத்துவ அறிக்கையை மன்றில் சமர்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு சமர்பிக்கும்வரை ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கும் மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது” என்றார்.