அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நாளை அல்லது நாளை மறுதினம் நிறைவேற்றப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஊடாக ஜனாதிபதி தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் தொலைபேசியில் தன்னை தொடா்பு கொண்ட வடமாகாண ஆளுநா், தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நாளை அல்லது நாளை மறுதினம் நிறைவேற்றி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளை வேறு குற்றங்கள் குறிப்பாக போதைவஸ்த்து குற்றங்களுடன் தொடா்புடைய கைதிகளுடன் தடுத்துவைக்க வேண்டாம் என ஜனாதிபதியை தாம் கோரியிருந்தாகவும், அதற்கு

உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியதாக ஆளுநா் தனக்கு தொியப்படுத்தியுள்ளார் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.