இலங்கையில் தலையீடுசெய்ய ஐ.நாவுக்கு அதிகாரமில்லை; வாசுதேவ

ஸ்ரீலங்காவின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு ஐக்கிய நாடுகளுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி அறிவித்துள்ளது.

ஐ.நா தமது அதிகாரத்தை கலவரங்களும் யுத்தங்களும் இடம்பெறுகின்ற நாட்டிலேயே காண்பித்துக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சோஷலிச மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

சோஷலிச மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார “வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை ஐக்கிய நாடுகள் ஸ்ரீலங்கா மீதான தலையீடுகளை நிறுத்தப்போவதில்லை என ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெசப் கூறியிருக்கின்றார். ஸ்ரீலங்காவிற்குள் தலையீடு செய்வதற்கு ஐக்கிய நாடுகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை.

அதிகமான கலவரங்களும். மனிதப படுகொலைகளும் இடம்பெறுகின்ற நாடுகளில் ஐ.நாவின் தலையீடுகள் அவசியமாகும். இன்று ஸ்ரீலங்காவில் ஐ.நாவின் தலையீடானது எமது தேவைகளுக்கு அமையவே இடம்பெறவேண்டும்.

மாறாக எமக்கு மேலாக அவர்கள் தங்களது அதிகாரத்தை இங்கே காண்பிடிக்க முடியாது. எமது ஆட்சியின்கீழ் 13ஆவது திருத்தத்தின் கீழ் வடமாகாண சபையை நாங்களே உருவாக்கினோம். தேர்தலை நடத்தியதும் நாங்களே.

அங்கு இராணுவம் அதிகளவில் இருந்தபோதிலும் எந்த அழுத்தங்களும் இருக்கவில்லை. 13ஆயிரம் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளை விடுவித்து சமூகமயப்படுத்தினோம். அதேபோல காணிகளையும் மீள ஒப்படைத்துவந்தோம்” என்றார்.