தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்படும் போர்க்கால நடைமுறை!

இலங்கையின் போர்க்காலத்தில் வடக்கு கிழக்கில் சேவையில் ஈடுபட்ட வாகனங்களில் எரிபொருள் பயன்படுத்தப்பட்ட விதம், தற்போது தென்னிலங்கையிலும் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கணிசமான பேருந்துகள், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் கலந்துள்ளமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன விசாரணைக் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேரூந்து உரிமையாளர்கள் தமது நாளாந்த போக்குவரத்து செலவை கட்டுப்படுத்துவதற்காக, குறிப்பிடத்தக்களவு மண்ணெண்ணெய்யை கலந்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் மின்சார வசதியில்லாத பகுதிகளில் வாழும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய்யை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில், மண்ணெண்ணெய் விற்பனையில் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்விலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய்யுடன் கலந்த எஞ்ஜின் ஒயிலை பேரூந்துகளுக்கு பயன்படுத்தும் முறை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வாகன பராமரிப்பிலும் சிக்கலை தோற்றுவிக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் போர்க்காலத்தில் வடக்கு கிழக்கில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளுடன் மண்ணெண்ணெய் கலந்து பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.