கைதான ஐதேக மாகாண சபை உறுப்பினர் வீட்டில் ஆயுதங்கள்

திவுலபிடிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரோத்ரிகோவின் வீட்டில் இருந்து, ரவைகள் மற்றும் குண்டு துளைக்காத கவச சட்டை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய, பல்வேறு வகையான ரவைகள் 115 இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, ரன்டீர் ரோத்ரிகோவின் மனைவியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பகல் திவுலப்பிட்டி பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குழுவொன்றுக்கும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், இதன்போது ரன்டீர் ரோத்ரிகோ உள்ளிட்ட ஏழ்வர் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களை இன்று மினுவான்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.