வட,கிழக்கு தொடர்பில் புலனாய்வு அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் விரைவில் ஒப்படைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவினால் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையொன்று கையளிக்கப்படவுள்ளது.

குறித்த மாகாணங்களில் உள்ள அரசியல்வாதிகளின் அண்மைக்காலமாக நடவடிக்கைகள் தொடர்பாக இந்த அறிக்கையில் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல் தெரிவிக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், அரசியல் செயற்பாடுகளும், எதிர்காலத் திட்டங்களும் மற்றும் சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் போன்றன குறித்த ஆய்வு அறிக்கையாக இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

மேலும் தேசிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படுகின்ற வகையில் செயற்பட்டவர்களது நடத்தைகளும் இந்த அறிக்கையில் விளாவாரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுடன் தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் கொண்டுள்ள தொடர்புகள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் போன்ற விடயங்கள் குறித்தும் தேசிய புலனாய்வு பிரிவினால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மிக விரைவில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று அரச தகவல்கள் மேலும் கூறுகின்றன.