சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திவுலப்பிட்டிய விவகாரம்: பொலிஸார் தீவிர விசாரணை

திவுலப்பிட்டிய பகுதியில் பெருமளவு ஆயுதங்களுடன் பயணித்த பாதாள உலகக் குழுவினருடன், ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்றிகோவும் கைதுசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் வானொன்றில் ஆயுதங்களுடன் ஒரு குழு பயணிப்பதாகவும், அவர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது பரஸ்பரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயரிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடற்படையில் பணியாற்றியுள்ளமையும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் அங்கு வானில் வந்தவர்கள் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ள நிலையில், அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுவினருடன் ரந்தீரும் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வத்தளையில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 100இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் குண்டு துளைக்காத அங்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து மாகாண சபை உறுப்பினரின் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் ஒருவரது வீட்டில் இவ்வளவு ஆயுதங்கள் எதற்காக, எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்ற கேள்விகள் எழுந்துள்ளதோடு, அவருக்கும் பாதாள உலகக் குழுவிற்கும் உள்ள தொடர்பு குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அப் பிரதேசத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் இவர்கள் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், திவுலப்பிட்டிய பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.