பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு

பேரறிவாளனின் பிணையினை நீடித்து வழங்குமாறு, தாயார் அற்புதம்மாள் கொடுத்திருந்த மூன்றாவது மனு இதுவரை பரிசீலனை செய்யப்படாதமையினால், அவர் மீண்டும் நாளை சிறைசெல்வதே உறுதி என தெரிவிக்கப்படுகின்றது.

ராஜீவ்காந்தி கொலை வழக்குடன் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டு, இருபது வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் பேரறிவாளனின் பிணைக் காலத்தை, மேலும் 30 நாட்கள் அதிகரித்து தரும்படி கூறி, அவரின் தாயார் அற்புதம்மாள், இம் மாதம் (ஒக்டோபர்) 21 ஆம் திகதி, தமிழக முதல்வரிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இதுவரை பரிசீலணை செய்யப்படாத நிலையில், நாளை பேரறிவாளன் சிறை செல்ல நேரிடும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தை உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால், அவரை பார்ப்பதற்காக கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிணையில் வெளியே வந்த பேரறிவாளன், அவரது வீட்டில் தங்கியிருந்தார். அதன் பின்னர், அவரின் தாயார் அளித்த இரண்டாவது மனுவின் பிரகாரம், நாளை (25.10.2017) வரை அவரின் பிணைக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அற்புதம்மாள் மூன்றாவது தடவையாகவும் மனு கொடுத்தார். “பிணையில் வந்த மகனுக்கு மேலும் 30 நாட்கள் காலஅவகாசம் வேண்டும்.”என கோரி குறித்த மனுவை மூன்றாவது தடவையாக தமிழக முதல்வரிடம் கையளித்தார்.

ஆனால் குறித்த மனு இதுவரை பரிசீலனைக்கு எடுத்துககொள்ளப்படவில்லை. எனவே அவர் நாளை மாலை 5 மணிக்கு சிறையில் அடைக்கப்பட கூடும் என, சிறைத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.