இந்திய தேசிய விளையாட்டு வீரர் இலங்கையில் பரிதாப மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியாவின் தேசிய விளையாட்டு வீரர் ஒருவர் கொழும்பில் இடம்பெற தொடரூந்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 64 வயதான இந்திய தேசிய தடகள வீரரான ராஜேந்திரன் பனிடாய் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

களுத்துறை-மருதானை தொடருந்து மார்க்கத்தில் பம்பலப்பிட்டி எனும் இடத்திலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குறித்த நபர் தொடருந்துவழித் தடத்தில் கால் தடுமாறி விழுந்ததனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Inter Mercantile தடகள சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இவர் நாட்டிற்கு வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதோடு இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்த ராஜேந்திரன் பனிடாய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதாகவும் அன்னாரின் உயிரிழப்பு அவர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.