பொது மக்களிடம் கையெழுத்து பெறும் பல்கலைக்கழக மாணவர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் பொது மக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து உடனடியாக வவுனியா நீதிமன்றத்திற்கு அல்லது யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

அனைத்து அரசியல்கைதிகளையும் பாரியகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுடன் தடுத்து வைப்பதை நிறுத்தி அவர்களை பாதுகாப்பான சிறைச்சாலையில் தங்குவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து தமிழ் அரசியல்கைதிகளினதும் வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

அரசியல் கைதிகளை எந்தவிதநிபந்தனைகளுமின்றி துரித கதியில் விடுதலை செய்து சமூகத்துடன் இணைக்க வேண்டும்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறந்தவாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு என்பவற்றில் அதிக கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.