கிளிநொச்சியில் மக்களைக் கண்டு ஓட்டம் எடுத்த அதிகாரிகள்

கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தை சூழவுள்ள பகுதியில் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி புல் வெட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று, அப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரணைமடுக் குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், கனகாம்பிகைக் குளத்திலிருந்து புல் வெட்டுவதற்காக அப்பகுதிக்குச் சென்ற நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கே பொதுமக்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கனகாம்பிகைக் குளத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து இரணைமடுக் குளத்தில் புற்களைப் பதிப்பதற்காக கனரக வாகனங்களைப் பயன்படுத்தி, புல்வெட்டும் நோக்கில் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு கனரக வாகனங்களைப் பயன்படுத்தி புல்வெட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன், தமது கால்நடைகளுக்கு தேவையான புற்களை அழிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

மக்களது இந்த எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து புல்வெட்டும் நடவடிக்கையைக் கைவிட்ட நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் திரும்பிச்சென்றுள்ளனர்.