வட மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து ஆளுனர் பதில்

வட மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அமுல்படுத்தப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதில் அதிகாரிகள் அசமந்தப் போக்கு காட்டுவதாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் தொடர்பில் ஆளுநர் இன்று (24) கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

கடந்த ஆவணி மாதம் புதிதாக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை கொண்ட பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஏறத்தாழ 150 பிரச்சினைகளுக்கான தீர்வினை கண்டறிந்துள்ளது.

இருந்தபோதும், இவற்றில் பல சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டும் நடைமுறைப்படுத்தப்படாது இருப்பதாகவும் அதிகாரிகள் தாமதம் காட்டிவருவதாகவும் ஊடங்களில் செய்திகள் வௌியாகியிருந்தன.

எனவே இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் உரியவர்களை அழைத்து தகவல்களை திரட்டி தீர்மானங்கள் செயற்படுத்தப்படாது கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடாத்த ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

ஆளுநரினால் புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்சேவை ஆணைக்குழு திறம்பட தனது பணியினை ஆற்றிவரும் நிலையில் அதிகாரிகளின் அசமந்தபோக்கு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாது இருப்பின் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறும் ஆளுநர் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.