முத்தையா முரளிதரனுக்கு சவால் விடுத்த டெரல் ஹெயாவுக்கு சிறை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் பந்துவீச்சு சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டை முதலில் முன்னிலைப்படுத்திய அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயா திருட்டுக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொழில்செய்துவரும் மதுபான விற்பனை நிலையத்தில் 7000 அமெரிக்க டொலர்களை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டதோடு விசாரணைக்காக சி.சி.ரி.வி காணொளியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பணம் திருடிய சந்தர்ப்பத்தில் காணொளியில் பதிவாகிய விடியோவை வைத்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட டெரல் ஹெயா பணத்தை திருப்பி ஒப்படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு 18 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1995ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற போட்டியில் முத்தையா முரளிதரன் பந்துவீசியபோது, அவரது பந்துவீச்சு சட்டவிரோதமானது என்று டெரல் ஹெயா 7 தடவைகள் முறைப்பாடு செய்தமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.