மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு நீதிபதி இளஞ்செழியனின் தண்டனை

மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு 8 வருட கடுழிய சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதி யோகராசா சிவகலா (வயது 42) என்ற குடும்பப் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது மகள் படுகாயடைந்திருந்தார்.

உயிரிழந்த பெண்ணின் மகளுடைய கணவரான கணேசையா காந்தரூபன் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மாமியாரான சிவகலாவை கொலை செய்தமை மற்றும் கர்ப்பணியாக இருந்த மனைவியை அடித்துக் காயப்படுத்தியமை என 2 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி வழக்கு விசாரணை இன்று (24) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

கொலைக் குற்றத்திற்காக 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும், கர்ப்பிணியான மனைவியை அடித்துக் காயப்படுத்திய குற்றத்திற்காக 1 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், 6 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

தண்டப்பணம் செலுத்த தவறின் மேலும் 2 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.