வவுனியா வர்த்தகர்களின் அவலம்

வவுனியா பேருந்து நிலையக் கடைத் தொகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தமையால் வர்த்தகர்கள் தமது பொருட்களை பாதுகாக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

வவுனியாவில் இன்று (24) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பேருந்து நிலைய கடைத்தொகுதிக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளது.

பேருந்து நிலைய மாடிக்கட்டடத் தொகுதி ஒன்று சேதமடைந்துள்ளது. அதனூடாக மழை நீர் வர்த்தக நிலையங்களுக்குள் நேரடியாகப் புகுந்துள்ளது.

கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தமது பொருட்களைப் பாதுகாக்க வேறு இடத்தை தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் மாதாந்த வாடகையாக ரூ.3,200 அறவிடப்பட்டபோதும், போதுமான பாதுகாப்பு மற்றும் வசதிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை என்று வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.