பௌத்த அமைப்புகளிடையே அதிகாரப் போர் மூண்டது

இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் கடும்போக்குடைய பௌத்த அமைப்புகளுக்கிடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளதால் பெரும் குழப்பநிலை உருவாகியுள்ளது.

சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் தமக்கான இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் மேற்படி அமைப்புகள் மும்முரமாக இறங்கியுள்ளன.

பொதுபலசேனா, ராவணா பலய, சிங்கலே, சிங்கலே அபி, சிங்கலே ஜாதிக பெரமுன, சிங்கலே ஜாதிக பலவேக உள்ளிட்ட அமைப்புகளுக்கிடையில்தான் இவ்வாறு நீயா? நானா? என்ற அதிகாரப்போர் மூண்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பே கடந்த காலங்களில் இலங்கையில் பேசப்பட்ட அமைப்பாக விளங்கியது. இனவாத ஆயுதத்தைக் கையிலெடுத்து ஏனைய மதங்களுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டதால் பன்னாட்டுச் சமூகமும் அவ்வமைப்புமீது கண்டனக் கணைகளைத் தொடுத்திருந்தன.

சர்ச்சைக்குரிய செயற்பாடுகளில் இறங்கினால்தான் பிரபல்யமடையலாம் என்ற நினைப்பிலேயே அவ்வமைப்பு சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதற்காக சமூக வலைத்தளங்களையும் அவ்வமைப்பு பயன்படுத்தியது.

இனவாத சிந்தனை கொண்டோர் மத்தியில் அவ்வமைப்பு பிரபல்யமடைந்தது.

அதன்பின்னர் ராவண பலய, சிங்கலே உள்ளிட்ட அமைப்புகளும் இதே பாணியில் செயற்பட ஆரம்பித்தன.

ரோஹிங்ய முஸ்லிம்கள் விவகாரத்தை சிங்கலே ஜாதிக பலவேக என்ற அமைப்பு கையிலெடுத்திருந்தது. புதிய அரசமைப்புக்கு எதிராக சில புதிய அமைப்புகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.

‘நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்துதல், கைதாகி சிறைச்சாலைக்குச் செல்லுதல், சர்ச்சைக்குரிய விடயங்களைக் கையில் எடுத்தல் ஆகிய நடவடிக்கையில் இறங்கினால் இலகுவில் பிரபல்யம் அடைந்துவிடலாம் என்ற மாயை நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த யுக்தியையே சில அமைப்புகள் கடைப்பிடித்து வருகின்றன. இந்த நிலைமை மாறவேண்டும். சட்டத்தை கேலிக்கூத்தாக்குவதற்கு இடமளிக்கக்கூடாது’ என்று அரசியல் விமர்சகர் சுட்டிக்காட்டினார்.