பலாலியில் உள்ள பாரிய இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அகற்றப்படுகின்றன

பலாலியில் உள்ள இராணுவ ஆயுத களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வலி.வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஏக்கர் காணிகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது. போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் ஆனா போதிலும் கடந்த அரசாங்கத்தால் மக்களின் காணிகள் மீள கையளிக்கப்பட வில்லை. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் பல ஏக்கர் காணிகளை கையளித்து உள்ளது.

இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது இராணுவ முகாம்கள் அமைந்துள்ள தனியார் காணிகள் மற்றும் இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அமைந்துள்ள காணிகள் இன்னமும் மக்களிடம் மீள கையளிகப்படவில்லை.

அவற்றை மிக விரைவாக கையளிக்கும் விதமாக தற்போது ஆயுத களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்களை இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு அகற்று கின்றனர்.

அவ்வாறு அவற்றை அகற்றிய பின்னர் எஞ்சியுள்ள தனியார் காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.