இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணனின் மகன் அமைச்சு அதிகாரி மீது தாக்குதல்

கல்வி இராாஜங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணனின் புதல்வர் திவாகர் கல்வியமைச்சிற்குள் நுழைந்து அமைச்சின் அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

பத்தரமுல்லை - இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் இன்றைய தினம் காலை நேர்முகப் பரீட்சையொன்று நடைபெற்றது.

இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அதனை அமைச்சரின் புதல்வர் என தன்னை அடையாளப்படுத்தியவர் காணொளி பதிவு செய்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தடுத்து நிறுத்த முயற்சித்த அமைச்சின் அதிகாரி மீது அவர் தாக்குதலை நடத்தியதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் மகன் அவரது செயலாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் ஊடகச் செயலாளர் தியாகுவிடம் வினவியபோது, இந்த சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தினார்.

அமைச்சரது நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் மீது காணப்படுகின்ற அதிருப்தி நிலை என்பவற்றை காரணம் காட்டி, இன்று நடைபெற்ற இந்த சம்பவத்துடன் முடிச்சு இட்டு சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.