ஆளப்போவது விஜய்யா? அல்லது தந்தை எஸ்.ஏ.சி.யா?

ஆளப்போவது விஜய்யா? அல்லது தந்தை எஸ்.ஏ.சி.யா?

விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் வெளிவந்து 4 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதும் பல திரையரங்குகளில் நிறைந்த பார்வையாளர்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இதுவரை 230 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது. விஜய் படம் ஒன்று 200 கோடி என்ற வசூல் சிகரத்தை தொட்டது இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவுக்கும் இது சாதனை தான்.

விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெரும் வரவேற்பும் ரசிகர் பட்டாளமும் இருக்கின்றது. அவர்களும் மெர்சலை ஏகத்துக்கும் கொண்டாடி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, கேரளாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் அண்மையில் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த ரசிகர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தக் குடும்பத்திற்கு உதவுவதற்கு விஜய் நற்பணி மன்றத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இந்த விடயத்தை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் காதுகளுக்கு கொண்டு சென்றதும், அவர் குறித்த குடும்பத்திற்கு உதவுவதற்கு நேரடியாக கேரளா – திருவனந்தபுரம் சென்றுள்ளார்.

அங்கு உயிரிழந்த விஜய் ரசிகரின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி விஜய் சார்பில் நிதியுதவியை எஸ்.ஏ.சி.வழங்கினார்.

விஜய்யின் தந்தை திருவனந்தபுரம் சென்ற செய்தி, அங்கு பரவியதும் ஏராளமான விஜய் ரசிகர்களும், ஊடகவியலாளர்களும் அங்கு திரண்டனர்.

அப்போது, நடிகர் விஜய் அரசியலில் குதிப்பாரா? என்பது பற்றி ஊடகவியலாளர்கள் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சி, ‘விஜய்யின் அரசியல் முடிவு பற்றி எனக்கு தெரியாது. அவர் தற்போது சினிமாவில் நல்ல நடிகராக உள்ளார்.

அவர் நடித்து வெளியாகி உள்ள ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றி இடம்பெற்றுள்ள வசனம் மற்றும் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அந்த எதிர்ப்புகளை தாண்டி ‘மெர்சல்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது’ என்றார்.

ஏற்கனவே, தன் அரசியல் ஆசையை விஜய் மூலம் தீர்த்துக் கொள்ள சந்திரசேகர் முயற்சிக்கின்றார் என்ற விமர்சனம் உள்ளது. எனவே, தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்யா? அல்லது விஜய் பேரில் அவர் தந்தை எஸ்.ஏ.சி.யா? என்ற குழப்பம் ரசிகர்களுக்கு உள்ளது.