நள்ளிரவில் மகிந்த பற்றிய கலந்துரையாடிய மைத்திரி மற்றும் சகாக்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளுக்கிடையிலான விஷேட கலந்துரையாடல் சந்திப்பு ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பிலும், மத்தியவங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பிலும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குறித்த சந்திப்பில் ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மஹிந்த அணியின் பங்களிப்பு மிக அவசியம் எனவும், மஹிந்தவின் ஆதரவு இல்லாதவிடத்து வெற்றிக்கான சிக்கல் ஏற்படும் எனவும் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயிலும் இந்த விடயத்தில் உடனடியாக தீர்மானங்களை எடுத்துவிட முடியாது என சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதோடு தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக விஷேட குழு ஒன்று உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள நிலையில் சுதந்திரக்கட்சியானது, தனித்து போட்டியிடவும் தயார் அதேபோன்று கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் தயாராகவே உள்ளோம் என சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, தென்னிலங்கை அரசியல் பல்வேறு விதமான போட்டிகளுடன் கூடிய தேர்தலுக்கான ஆயத்தங்களில் சூடுபிடித்துள்ள நிலையில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளமை முக்கியமான விடயமாக நோக்கப்படுகின்றது.

அதேசயம் மஹிந்த அணியின் செயற்பாடுகளும் தற்போதைய அரசுக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டு வருவதால் கூடிய விரைவில் தென்னிலங்கை அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.