யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்!

மாவீரர் வாரம் ஆரம்பமானதை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், தமிழீழ இலட்சியத்திற்காகவும் போராடி விதையாக மண்ணில் வீழ்ந்த மாவீரர்களுக்கு நினைவேந்தும் வார நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு உட்பட புலம்பெயர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிகாட்டலுக்கமைய 1989 ஆண்டு முதல் மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் 2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்னர் மாவீரர் தின நினைவேந்தல்களை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக மேற்கொள்ள தடைகள் வெளிப்படுத்தப்பட்டு வந்தன.

எனினும் தொடர்ந்தும் வந்த எதிர்ப்புகளுக்கு பின்னர் கடந்த வருடமும், இந்தவருடமும் வீழ்ந்த மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை தமிழர்கள் அச்சமின்றி பகிரங்கமாக அனுஷ்டித்து வருகின்றனர்.

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு இலங்கையில் பகிரங்கமாக நினைவுகூருவதற்கு ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வெளிவந்தாலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர்கள் மாவீரர் நினைவேந்தல்களை இன்று முதல் உள்ளார்ந்த உணர்வு பூர்வமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் வாரநிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்திலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று ஆரம்பமான மாவீரர் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள பிரதான நிகழ்வுடன் நிறைவு பெறும் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.