வெள்ளவத்தை கடற்கரையில் அச்சம்?

வெள்ளவத்தை கடற்கரைப்பகுதியில் மீன்கள் பெருமளவில் கரையொதுங்கியமைக்கு காரணம் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி அல்ல என்று நாரா நிறுவனத்தின் தலைவர் அனில் பிரேமரத்ன இன்று தெரிவித்தார்.

வெள்ளவத்தைக் கடற்கரையோர பிரதேசத்தில் வழமைக்கு மாறாக பெருமளவு மீன்கள் நேற்று காணப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், ”சுனாமிப் பேரலை ஏற்படவேண்டுமாயின் கடலின் ஆழமான பகுதியில் அல்லது கரையோரப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படவேண்டும்.

கடற்பகுதியில் 10 தொடக்கம் 20 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் தான் சுனாமி நிலைமை ஏற்படும்.

அவ்வாறு எதுவும் இதுவரை பதிவாகவில்லை. இதனால் மீன்கள் பெருமளவில் கரைக்கு வருவதையிட்டு மீனவர்களோ பொதுமக்களோ அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வெள்ளவத்தைக் கடற்கரையோரப் பிரதேசத்தில் மீன்கள் பெருமளவில் கரையொதுங்கியமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என அனில் பிரேமரத்ன மேலும் தெரிவித்தார்.